கடந்த 6 ஆம் திகதி பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. 9 பேர் உயிரிழந்து, 40இற்கும் மேற்பட்டவர்கன்காயமடைந்த இந்த விபத்திற்கு, இ.போ.ச நிர்வாகம் பேருந்தை முறையாக பராமரிக்காததே காரணமென தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிவுறுத்தலின் பேரில் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் அறிக்கையில் இது அம்பலமாகியுள்ளது. விபத்துக்கான காரணங்கள் மற்றும் பரிந்துரைகள் உள்ளிட்ட குழுவின் அறிக்கை அமைச்சரிடம், அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன வெள்ளிக்கிழமை (24) ஒப்படைத்தார்.
அறிக்கையைப் பெற்ற பின்னர், இ.போ.ச பேருந்து நிலையங்கள் குறித்து உடனடியாக ஆய்வு செய்யுமாறு இ.போ.ச தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவுக்கு போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தினார். இ.போ.ச டிப்போக்களில் உள்ள தொழில்நுட்ப அதிகாரிகள் மூலம் இந்த பழுதுபார்ப்புகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் தலைவருக்கு அறிவுறுத்தினார்.
பசறையிலிருந்து அகிரியாவுக்குச் செல்லும் இ.போ.ச பேருந்து சாலையில் இருந்து விலகி, பசறை – மடுல்சீமை வீதியின் 6 வது மைல்கல் பகுதியில் 150 அடி செங்குத்தான பாதையில் விழுந்ததில், ஒன்பது பேர் கொல்லப்பட்டு, 40 பயணிகள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.