ஜனாதிபதி மக்களின் நலன் கருதி நாடாளுமன்றத்தைக் கலைத்து தனக்காக அரசை ஸ்தாபிக்கும் அதிகாரம் அரசமைப்பின் 19வது திருத்தத்தின் ஊடாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நாம் ஆட்சியமைத்தால் மாத்திரமே பல நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியும்.
பெரும்பான்மை ஆதரவுடன் பலமான அரசை நாம் தோற்றுவிக்க முடியாவிடின் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியும் மக்களின் எதிர்பார்ப்பும் பயனற்றதாகிவிடும்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனான பலமான அரசை நிச்சயம் ஸ்தாபிப்போம். அரசமைப்பின் 19வது திருத்தத்தால் அதிகார முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன், நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை அனைத்து மோசடிகளுக்கும் நேரடிப் பங்கு வகிக்கின்றது.
அதேவேளை, பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவைக் கைதுசெய்வதற்கு ஆலோசனை வழங்கியமை தொடர்பில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை அரசமைப்பு பேரவை விசாரணை செய்வதற்கு முழு அதிகாரமும் உண்டு.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை அடிப்படையாகக்கொண்டு பொலிஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்றுள்ள நீதிபதிகள் உட்பட இதுவரையில் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதன் ஓர் அங்கமாகவே மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தற்காலிகமாகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதியைக் கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியிருந்தது.
இதையடுத்து நியாயமான காரணிகள் இன்றி எவரையும் கைதுசெய்ய வேண்டாம் எனவும், கைது நடவடிக்கைகளின் போது பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனைத்துத் தரப்பினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆகவே, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவைக் கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள அரசமைப்புப் பேரவைக்கு முழு அதிகாரம் உண்டு, என்று கூறியுள்ளார்.