அரசாங்க அதிகாரிகளுக்கு சுற்றிக்கைகளை அனுப்புவது வேலை செய்வதற்காகவே அன்றி செய்யும் வேலையை நிறுத்த அல்ல என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சில் இன்று நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கம் அரச அதிகாரிகளை அசௌகரியத்தை ஏற்படுத்த எடுத்த தீர்மானங்கள் காரணமாக அரச சேவை ஓரளவுக்கு செயலற்று போனது.
அத்துடன் கடந்த அரசாங்கம் அரச செலவுகளை அதிகரிப்பதை முகாமைத்துவம் செய்யாத காரணத்தினால், வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை அதிகரித்துள்ளது.
கடந்த அரசாங்கம் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் நிதியை ஒதுக்கியுள்ளதால், அரசாங்கம் மாத்திரமல்ல அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பங்களிப்பு செய்த தனியார் நிறுவனங்களும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளன.
அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருக்கும் வர்த்தகர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள நிவாரண பொதி ஊடாக அவர்கள் தமது வர்த்தகத்தை முன்னெடுத்து செல்ல உதவியாக இருக்கும்.
இதற்காக நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


















