கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்களிக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
அதிகளவிலான வரிசுமை காணப்படுவதாக ஆதனவரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில், வர்த்தகர் ஒருவர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது விசேட அமர்வு ஒன்றினை நடத்தி இது தொடர்பில் ஆராயப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வு இன்று பிற்பகல் ஆரம்பமாகியது.
இதன்போது குறித்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சந்திரகுமார் தலைமையிலான உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து 10 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் சபை அமர்வுகள் ஆரம்பமாகியபோது ,வாய்த்தர்க்கம் கைகலப்பு வரை சென்றுள்ளது.
இதனையடுத்து , கூட்டமைப்பின் உறுப்பினர் ஜீவராசா மீது சுயேட்சைக்குழு உறுப்பினர் ரஜனிகாந்த் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்காகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.