அரச சேவையாளர்களின் சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளை தீர்ப்பதில் அரசாங்கம் பின்வாங்குகின்றது.
இந்த பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்கு பாராளுமனறத்தில் குறைநிரப்பு பிரேரணையொன்றினை சமர்பிக்குமாறு ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
மக்களுக்கான நலன்களைக் கிடைக்கப் பெறாமல் செய்வதற்கே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்க்கின்றது என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
அரச சேவையாளர்களின் ஓய்வூதியம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட போது பல்வேறு பேராட்டங்களை முன்னெடுத்தது.
ஓய்வூதியம் தொடர்பில் பல யோசனைகளையும் முன்வைத்தது. எனினும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவற்றை அரசாங்கம் புறந்தள்ளுகின்றது.
அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2019 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் திருத்தங்கள் எவையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும்,
2020 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஓய்வூதிய திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 ஆம் திகதி அரச சேவை அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கு அமைய இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அதற்கமைய குறித்த காலப்பகுதிக்குள் ஓய்வுபெற்றவர்கள் ஓய்வுப்பத்திரத்தை வழங்கும் போது 2020 ஜனவரி முதலாம் திகதி முதல் திருத்தப்பட்ட ஓய்வுதியத்துக்கான ஆவணமும் இணைத்தே வழங்கப்படும்.
அதே போன்று புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்றதன் பின்னர் 2019 டிசம்பர் 10 ஆம் திகதி, 2016.01.01 மற்றும் 2020.01.01 ஆகிய தினங்களின் பின்னர் ஓய்வு பெறும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள முரண்பாடுகள் தீர்த்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. நிதி அமைச்சும் இதற்கு இணக்கம் தெரிவித்தது.
எனினும் அரசாங்கம் தற்போது அவ்வாறு செயற்படவில்லை. இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி ஓய்வூதியத்தை அதிகரிக்கும் திட்டத்தை கைவிடுவதாகவும், புதிய அரசாங்கத்தின் கொள்கையின் படி வரவு – செலவு திட்டத்துக்கு அமைய அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதன் மூலம் 2016 ஆம் ஆண்;டுக்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய அதிகரிப்பு இரத்து செய்யப்படுவதோடு, இவ்வருடத்தில் ஓய்வு பெறுவர்களுக்கு அந்த உரிமை இல்லாமலாக்கப்படுகின்றது.
இது தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய போது இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். எனினும் நிதி அமைச்சின் அனுமதியுடனேயே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் திட்டமிடப்படாத பொருளாதார கொள்கைகளினால் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகின்றது.
இதே போன்று நிறைவேற்று தரத்திலான அதிகாரிகளுக்கு 15, 000 ரூபாய் விஷேட கொடுப்பனவொன்றை வழங்குவதாக கடந்த அரசாங்கம் சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. எனினும் இம் மாதம் 7 ஆம் திகதி புதிய அரசாங்கம் அதனையும் இரத்து செய்துள்ளது.
அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு தொடர்ந்தும் ஊதியப்பிரச்சினை காணப்படுகின்றது. இதற்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் தீர்வுகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்த முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்காக தொழிற்சங்கங்களும் , அரசியல் கட்சிகளும் பல போராட்டங்களை முன்னெடுத்திருகின்றன.
அதனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பள முரண்பாடு தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தார். அந்த குழுவால் அறிக்கையொன்றும் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒவ்வொரு அரச துறையினருக்கும் குறிப்பட்ட காலத்தில் சமாந்தரமாக ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய 2020 ஆம் ஆண்டு ஊதியத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய அரசாங்கம் அதற்கேற்ப செயற்படவில்லை.