உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், காலநிலை அவசரத்தைச் சீர்செய்ய திட்டங்களைச் செயல்படுத்துமாறு, ஐக்கிய நாடுகளின் சபை உறுப்பினர் எலிசபெத் மருமா ரெமா (Elizabeth Maruma Mrema) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பூமியில் வன உயிரினங்கள் பெருமளவில் அழிந்து வருகின்ற நிலையில் சுற்றுச்சூழலும் வாழ்வாதாரமும் இதனால் சீரழிகின்றதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த ஆண்டிலாவது இதைத் தடுத்து நிறுத்த ஏதாவது ஒப்பந்தத்தை உலக நாடுகள் உருவாக்கிட வேண்டும் என்றும் இல்லையெனில் இந்தப் பூமியை விரைவில் நாம் கைகழுவ வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.2016-ல் முன்னணி உலகநாடுகள் பங்கேற்ற பாரிஸ் ஒப்பந்தம் காலநிலை அவசரப் பிரச்னையைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ஒப்பந்தத்தை வழிநடத்தும் அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டார். அதற்கு முந்தைய ஒரு சந்திப்பில், “மக்களின் வாழ்வு தரமான சுற்றுச்சுழலை நம்பித்தான் இருக்கிறது. ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், எரிபொருள் என எல்லாவற்றுக்கும் இயற்கை சார்ந்தே இருக்கிறோம்” என்று கூறியது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.
கடந்த ஆண்டு மே மாதம், “பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட பத்திலிருந்து நூறு மடங்கு வரை வேகமாக உலகம் அழிந்து வருகிறது” என முன்னணி அறிவியலாளர்கள் எச்சரித்தனர். `இதேவேளை `ஆறாவது பேரழிவை நோக்கி மனித குலம் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டுவர நம் கையில் மிகச் சொற்ப காலமே உள்ளது” என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையெல்லாம் மேற்கோள் காட்டி, “வணிக நிறுவனங்கள், குடிமையியல் அமைப்புகள், இளைஞர்கள் என எல்லோரும் செயல்பட வேண்டும். மாற்றத்தை நோக்கி நாம் புறப்பட வேண்டும்” என்றும் எலிசபெத் கூறினார். இவ்வாறான நிலையில் கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த பாரிஸ் ஒப்பந்த மாதிரியின் முன்வரைவு வெளியிடப்பட்டது. “குறைந்தபட்சம் பூமியின் 30 சதவிகிதப் பகுதியையாவது காப்பாற்ற முன்வாருங்கள். கண்டறியப்படாத நோய்கள், நெகிழியால் ஏற்படும் மாசு, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றை 50 சதவிகிதம் வரை குறைக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வரும் அக்டோபர் மாதம் சீனாவில் கூடும் ஐ.நா உச்சிமாநாட்டில் இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இதில் குறிப்பிட்டுள்ளதைவிட பிரமாண்டமான திட்டம் வேண்டுமென சில காலநிலை ஆர்வலர்கள் கருதுகின்றனர். “இந்த அறிவிப்பைவிட மிகப் பிரமாண்டமாக ஏதும் வெளியாகும் என நான் எதிர்பார்த்தேன்” என எலிசபெத்தும் கூறியிருந்தார்.
“நாம் எவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் போகிறோமோ, அவை நம்மைவிட நம் குழந்தைகளைப் பாதிக்கக் காத்திருக்கின்றன. பெற்றொரிடமிருந்து என்ன பெற வேண்டுமென குழந்தைகள் நன்றாக அறிந்திருக்கின்றனர்” என்கிறார்.
இறுதி எச்சரிக்கையாக, “ஒருவேளை அரசுகளும் இதைச் செயல்படுத்தாவிட்டால், விளைவுகள் மேலும் கவலை அளிக்கும் என்க்குறிப்பிட்ட எலிசபெத் , நாங்கள் எச்சரிக்கும் வேலையைச் சரியாகச் செய்துவிட்டோம். செயல்படுத்துங்கள், இல்லையெனில் பல்லுயிர் காடுகள் அழியும், மனித குலம் அழியும், மாசு நடவடிக்கை தொடரும், காடு இழப்பு தொடரும், இறுதியில் வெற்று உலகு மட்டும் தனித்திருக்கும் என எலிசபெத் எச்சரித்துள்ளார்.
ஐ.நா-வில் பல்லுயிர் நல அமைப்பின் நிர்வாகச் செயலாளராக இருக்கும் இவர், சமீபகாலமாகப் புவி சார்ந்த அறிவியல் முடிவுகளை அதிக அளவில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் “மீண்டும் ஒரு வெறுமையான ஆண்டாக 2020-ஐ நாம் கழித்துவிட முடியாது என்றும், முந்தைய ஆண்டுகளில் மாநாடு நடத்தியதுபோல், வெற்றுப் பேச்சோடு நிறுத்திவிடாது கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து வரும் பூமியைக் காப்பாற்ற, உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும் என்றும் அவர் அதிகார மையத்திடம் எடுத்துக்கூறியுள்ளார்.
ஐ. நா. சபை உறுப்பினர் எலிசபெத் மருமா ரெமா இப்படிப் பேசியதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது.
அதாவது உலகின் மிகக் கொடிய ஆபத்துகளில் மூன்றாவது இடத்தில் இருப்பது, `பல்லுயிர் வள இழப்பு (Biodiversity loss)’ என்பதை உலகப் பொருளாதார மன்றமே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாதத் தாக்குதல், மக்களைத் தாக்குகின்ற கொடிய நோய்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி முன்வரிசையில் நிற்பது இந்தக் காலநிலை ஆபத்துதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். அந்தக் கூட்டத்தில் இதை முன்னிறுத்தி ஏதாவது திட்டம் தீட்ட வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலேதான் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “மனித வாழ்வை உறுதிப்படுத்தும் சுற்றுச்சூழல் சமநிலையில் பங்கு வகிக்கும் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. பவளப்பாறைகள், மழைக்காடுகள் போன்றவற்றின் இழப்புகளால் ஏற்படும் பெரும் விபத்துகளைத் தாண்டி, உயிரினங்களற்ற வெற்று உலகிற்கே நம்மை அழைத்துச் செல்லும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.