புற்றுநோயால் இறந்து கொண்டிருந்த தனது தாயைப் பார்ப்பதற்காக சீனா சென்ற பிரித்தானிய ஆசிரியை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.
சீனாவை பூர்விகமாக கொண்ட 37 வயதான முயிங் ஷி என்பவர் லண்டனில் 5 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் ஜனவரி மாத தொடக்கத்தில் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துகொண்டிருந்த தனது தாய் லிப்பிங் வாங் (63)-ஐ பார்ப்பதற்காக, 300 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற கொடிய புதிய நோய்த்தொற்றின் மையப்பகுதி வுஹானிற்கு சென்றார்.
அடுத்த சில தினங்களில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டார்.
சி.டி. ஸ்கேன் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவரது நுரையீரலில் கொரோனா தொற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என் உயிருக்காக நான் அதிகம் பயப்படுகிறேன். ஆனால் அதனைபற்றி நான் யோசித்துக்கொண்டே இருக்க முடியாது. ஏனென்றால் நான் மனம் உடைந்துவிடுவேன். நான் ஒரு நூலில் ஊசல் ஆடுவதை போல உணர்கிறேன்.
இங்கு வைரஸ் பற்றி யாருக்கும் தெரியவில்லை. சரியான சிகிச்சையும் கிடையாது. என் அப்பா எனக்கு வலி நிவாரணி மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கொடுத்து வருகிறார்.
இங்கு இருக்கும் சக நோயாளிகள் எந்த மருந்தையும் பெறவில்லை. வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொண்டு என்னை பார்க்க வருவதால், இறக்கப்போகும் எனது தாயை பார்க்க முடியாமல் தந்தை கண்ணீர்விட்டு அழுகிறார் என வேதனை தெரிவித்துள்ளார்.