சிறையில் அறிமுகமான மூன்று நண்பர்கள் தொடர்ந்து வீடுகளை உடைத்து திருடி வந்த நிலையில் நாவலப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நேற்று நாவலப்பிட்டி நீதி மன்ற நீதவான் சாந்தினி மீகொட முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் அன்றைய தினம் சந்தேக நபர்களை அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
கண்காணிப்பு கெமரா பொருத்துனரான பிரதான சந்தேக நபர் சில காலங்களுக்கு முன்னர் காசோலை மோசடி ஒன்றுடன் தொடர்புபட்டு சிறைத் தண்டனை பெற்றிருந்தார்.
இச்சந்தர்ப்பத்தில் அங்கு அறிமுகமான இருவருடன் பழக்கம் ஏற்படவே மூவரும் நண்பர்களாகியுள்ளனர்.
இதன்போது, நண்பர்களில் ஒருவர் வாழ்க்கையில் விரைவில் முன்னேற வேண்டுமானால் குறுகிய கால இடைவெளிக்குள் தொடர்ந்து வீடுகளை உடைத்து திருடி பணத்தை சேர்த்து வேறு தொழில்கள் ஏதேனும் செய்யலாம் என்ற யோசனையை முன்வைக்க, அதனை ஏனைய இரு நண்பர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பின்னர் விடுதலையாகி வெளியில் வந்த இவர்கள் கண்காணிப்பு கமரா பொருத்துனரான சந்தேக நபர், வீடுகளுக்கு கண்காணிப்புக் கமரா பொருத்தச் செல்லும் சந்தர்ப்பங்களில் துல்லியமாக உளவு பார்த்து வழங்கும் தகவல்களுக்கு அமைய குறுகிய கால இடைவெளிக்குள்,
நாவலப்பிட்டி – கொத்மலை வீதி பௌவ்வாகம, இம்புல்பிட்டிய, மீபிட்டிய ஆகிய பிரதேசங்களில் ஐந்து வீடுகளை தொடர்ச்சியாக உடைத்து சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள், பணம் உட்பட பொருட்களை திருடியுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சந்தேக நபர்கள் நாவலப்பிட்டிபேலி வீதியில் உள்ள வீடு ஒன்றைஉடைப்பதனை அவதானித்த அவ்வழியால் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் சத்தமிட்டதனையடுத்து சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் அவர்களால் தவற விடப்பட்ட கைத்தொலைபேசி ஒன்றை மையப்படுத்தி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.