சீனாவின் வுஹான் நகரை மொத்தமாக சுற்றிவளைத்து அனைத்து மக்களையும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது கொடிய வியாதிக்கு எதிரான மக்கள் போர் என அறிவித்துள்ள துணை ஜனாதிபதி Sun Chunlan, நாட்டின் அனைத்து நிலை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்த போரில் முன்னின்று போராட வேண்டும் எனவும்,
அல்லது வரலாற்றின் அவமானச் சின்னமாக என்றென்றும் உங்கள் பெயர்கள் நிலைக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
14 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரத்தில் எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் உள்ளனர் என்ற எண்ணிக்கை மர்மமாகவே உள்ளது.
அல்லது வுஹான் நகரத்து பெரும்பாலான மக்களை ஹூபே மாகாண அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது தொடர்பிலும் தகவல் இல்லை.
கொரோனா வியாதி தொடர்பில் தகவல் பரவலாக வெளியானதும், வுஹான் நகரை மொத்தமாக முடக்கியது மாகாண அரசாங்கம்.
அதன் பின்னர் அங்குள்ள மக்கள் தொடர்பில் எந்த தகவலும் வெளிவரவில்லை. மட்டுமின்றி வுஹான் நகரின் சுற்றுவட்டாரத்தில் குடியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் போதிய பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.
வுஹான் நகர 14 மில்லியன் மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா, இல்லையா என்பது குறித்து தகவல் சேகரிக்கும் பொருட்டு, தற்போது குடியிருப்புகள் தோறும் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வுஹான் நகரில் நான்கு வகையாக மக்களை கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்று துணை ஜனாதிபதி திருமதி சன் கோரியுள்ளார்.
அதில் நோய் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள், சந்தேகத்திற்கிடமான நபர்கள், இந்த இருவருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள்.
போர்க்கால அடிப்படையில் பணியாற்ற 24 மணி நேரமும் உரியவர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும்,
மக்களுக்கான இந்த போரில் இருந்து தப்பியோடியவர்கள் அல்லது தப்பியோட முயல்பவர்கள் கண்டிப்பாக துரோகிகள் பட்டியலில் இடம்பெறுவார்கள் என துணை ஜனாதிபதி சன் எச்சரித்துள்ளார்.
பொதுவாக சீனாவை பொறுத்தமட்டில் அரசு மற்றும் அரசியல் தொடர்பான அனைத்து விடயங்களிலும் ஜனாதிபதி ஜி ஜிங்பிங் மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட்டு வந்த நிலையில்,
கொரோனா வியாதியால் நாடே ஸ்தம்பித்துப் போயுள்ள இந்த கடுமையான சூழலில் ஜனாதிபதியின் முன்னிலை சமீப நாட்களாக காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.