எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், எமது கூட்டணியின் சார்பில் நாம் உருவாக்கிவரும் புதிய எதிரணி கூட்டணியில் நுவரெலியா மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெறுவார் என நாடாளுமன்ற உறப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதை நமது கூட்டணியும், கூட்டணி கட்சியான மலையக மக்கள் முன்னணியும், நமது மக்களும் கவனித்து கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி, தங்களுடன் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்துகிறார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கூறியிருந்தார்.
அவருக்கு பதிலளித்த கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி, திசாநாயக்கவின் கூற்றை மறுத்து, தான் அத்தகைய எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, தான் கூட்டணியின் வேட்பாளாராக புதிய எதிரணி கூட்டணியிலேயே போட்டியிட போவதாக கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மனோ கணேசன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
கடந்த தேர்தலில் தோல்வியடைந்து, பின்னர் நாம் பதவிக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபாலாவின் தோளில் தொங்கி, தேசிய பட்டியல் நியமனம் பெற்று, நாடாளுமன்றம் வந்து, எமது அமைச்சரவைக்குள்ளும் நுழைந்து எமது அரசை நாசம் செய்த எஸ்.பி.திசாநாயக்க, தேர்தலில் வெற்றி பெற்று வந்த எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது.
எஸ்.பி.திசாநாயக்க, அரசியல் தகிடுதத்தம் செய்து இந்த முறையும் எவரது தோளிலாவது சவாரி செய்து நாடாளுமன்றம் வர எத்தனிப்பது நன்கு தெரிகிறது. இம்முறை தோள் பாய்ச்சலுக்கு இடம்கிடையாது. சொந்த முயற்சியில்தான் வர வேண்டும்.
இந்த முறை எஸ்.பி.திசாநாயக்கவுக்கு தேசிய பட்டியல் நியமனம் எதுவும் கிடைக்க போவதும் இல்லை என்பது நிச்சயம். மொட்டா, நாற்காலியா என்ற இறுதி தீர்மானமும் இதுவரை இல்லை.
இந்நிலையில் தனது எதிர்காலமே கேள்விக்கு உள்ளாகி இருக்கும் வேளையில் அடுத்தவரை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு, தன்னை பற்றி அவர் கவலைப்பட வேண்டுமென நினைக்கிறேன் என கூறியுள்ளார்.