தேர்தல் ஒன்றில் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கையே பிரதானமானது. எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை வருத்தத்துடன் என்றாலும் தெளிவாக கூற வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
“ உருவாக்கப்படும் எந்த கூட்டணியாக இருந்தாலும் இணைத் தலைவர்கள் இருக்க முடியாது. மகிந்த ராஜபக்சவே கட்டாயம் கூட்டணியின் தலைவராக இருக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் உருவாக்கும் கூட்டணியின் தலைவர் பதவியை வேறு எவருக்கும் வழங்க மாட்டோம்.
ஒத்துழைப்புகளை சீர்குலைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினர் ஏன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்?. சின்னம் பிரச்சினையாக இருக்காது. நாடும் மக்களும் ஏற்றுக்கொண்ட தாமரை மொட்டுச் சின்னமே தேர்தல் சின்னம்.
மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதே தேர்தல் வெற்றிக்கான பிரதான சாதக நிலைமை. பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தமாக மக்களுக்கு நம்பிக்கையில்லை” எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.