பிரித்தானியாவில் இருக்கும் விஜய்மல்லையா, இந்தியாவுக்கு வரமாட்டேன், மொத்த பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் தனது நிறுவனத்துக்காக வாங்கிய கடன், வட்டியுடன் சேர்த்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக இவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. தற்போது லண்டனில் உள்ள அவரை நாடு கடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.
இதில் இறுதி வாதம் நேற்று முன்தினம் முடிந்தது. தீர்ப்பு வேறொரு நாளுக்கு லண்டன் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இதையடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியே மல்லையா அளித்த பேட்டியில், வங்கிகளில் நான் வாங்கிய கடனை அடைக்கவில்லை எனக்கூறி, அமலாக்கத்துறை என் மீது வழக்கு பதிவு செய்து, சொத்துக்களை பறிமுதல் செய்து விட்டன.
நான் கடனை அடைக்க தயாராக இருக்கிறேன். வங்கிகளுக்கு நான் கூப்பிய கரங்களுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தயவு செய்து நான் தர வேண்டிய கடனில் அசல் முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கடனை எனக்காக அல்ல, கிங் பிஷர் நிறுவனத்துக்காகத்தான் வாங்கினேன். கடன் தொகையில் எந்த தள்ளுபடியும் நான் எதிர்பார்க்கவில்லை. மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.