சீன மக்களை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவில் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் இருக்கும் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களிடம் பரவ துவங்கியது.
இந்த நோய் தற்போது நாள் தோறும் தீவிரமடைந்து, 1500 பேரின் உயிரை வாங்கியுள்ளது. சீனா மட்டுமின்றி உலகின் 30 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இருப்பதால், அதை கட்டுப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸால், சீனாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. ஏனெனில் உலகநாடுகள் சீனாவிடம் இருந்து வாங்குவதையும், விற்பதையும் தற்போதைக்கு நிறுத்தியுள்ளன.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியாக, தனது நாட்டின் சில மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து கட்டுமான பணிகளை சீனா துவங்கியுள்ளது,
தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம், அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக இந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே இந்நாட்டில், 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்நாட்டு மக்களிடம் பீதி நிலவுகிறது.
இதனிடையே, ஜப்பானில் நடுக்கடலில் 3,700 பயணிகளுடன் நிறுத்தப் பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் நோய் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவர்களின் பற்றாக் குறை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மருத்துவர்கள், சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமாக முன்வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது, ஒரு தற்கொலை திட்டம் எனவும், விருப்பமுள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முன்வரலாம் என்றும் சீன அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த சுகாதார ஊழியர்கள் 6 பேர், இந்நோய் தாக்கி இறந்துள்ளனர்.
இப்பணியில் ஈடுபட்டுள்ள 1,700 சுகாதார ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.