யாழ்.அராலித்துறையில் 3 இறால் பண்ணைகளை அமைப்பதற்கு பெரும் செல்வந்தா்களுக்கு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், இதன்காரணமாக அப்பகுதி மீனவா்கள் பெரும் பாதிப்பை எதிா்கொள்ளும் ஆபத்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யாழ்.வேலணை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இப் பிரதேசத்தில் மூன்று நிறுவனங்களிற்கு தலா 50 ஏக்கர் விகிதம் மொத்தம் 150 ஏக்கர் நிலம் வழங்கப்படவுள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களிற்கும் வழங்கப்படும் இடங்களிற்கான அனுமதியினை பிரதேச சபை, நீரியல்வளத்துறைத் திணைக்களம், நெக்டா, மீபா, கரையோரப் பாதுகாப்பு அதிகார சபை ஆகியன அனுமதியை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
யாழ் தீவுப் பகுதியில் ஏற்கனவே 8 பண்ணைகள் உள்ள நிலையில் தற்போது அரச நிலத்தில் பண்ணைகள் அமைப்பதற்காக வழங்கப்படும் இந்த நிலங்கள் 35 ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் நிலையில் இவர்களிற்கான வாடகைப் பணத்தை விலை மதிப்பீட்டுத் திணைக்களமே தீர்மானிக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமையால் எமது உள்ளூர் வளங்களும் மீன்பிடியில் பாதிப்பும் ஏற்படுமென உள்ளூர் மீனவர்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.