239 பேருடன் மாயமான மலேசிய விமானம் தொடர்பாக 6 ஆண்டுகளுக்கு பின் அதிர வைக்கும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மலேசியாவிற்கு சொந்தமான எம்எச்370 (MH370) விமானம் மாயமாகி 6 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் அந்த விமானத்திற்கு என்ன ஆனது? என்பதை இன்று வரை யாராலும் உறுதியாக கூற முடியவில்லை.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்று கொண்டிருந்த எம்எச்370 விமானம், கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி திடீரென மாயமானது.
இதில், 239 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் சீனாவை சேர்ந்தவர்கள். ஆனால் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு என்ன ஆனது? என்பது தெரியவில்லை.
மாயமான எம்எச்370 விமானத்தை கண்டறியும் பணியில், மலேசியாவிற்கு உதவியாக பல்வேறு நாடுகளும் களத்தில் இறங்கின.
ஆனால் குறிப்பிடப்படும்படியாக எந்த தடயமும் சிக்கவில்லை. இந்திய பெருங்கடலில் சுமார் 1,20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு (46 ஆயிரம் சதுர மைல்) தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் அவை தோல்வியில்தான் முடிந்தன.
இதற்கிடையே அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று, கடந்த 2018ம் ஆண்டு, தனியாக தேடுதல் பணிகளை தொடங்கி அதுவும் வெற்றி பெறவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், மலேசியாவின் எம்எச்370 விமானம் மாயமானது தொடர்பாக, அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் (Tony Abbott) திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
“இது பைலட்டால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதி” என்கிற ரீதியில் டோனி அபோட் தெரிவித்துள்ள கருத்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
தற்கொலை செய்யும் எண்ணத்துடன் எம்எச்370 விமானத்தை அதன் பைலட் வேண்டுமென்றே விபத்தில் சிக்க வைத்து விட்டார் என மலேசியாவின் முக்கிய உயரதிகாரிகள் நம்புவதாக டோனி அபோட் கூறியுள்ளார்.
பைலட்தான் திட்டமிட்டு இந்த விபத்தை நடத்தி விட்டதாக மலேசியா நம்புகிறது என விபத்து நடந்த ஒரு வாரத்திற்குள் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் டோனி அபோட் பேசியுள்ளார்.
இது பைலட்டால் நிகழ்த்தப்பட்ட மாஸ் மர்டர்-சூசைட் என டோனி அபோட் தெரிவித்திருப்பது பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.