மேற்கு லண்டன், ஹேய்ஸைச் சேர்ந்த சஃபியா ஷேய்க், குண்டினை வெடிக்க வைப்பதற்காக நட்சத்திர விடுதிகள் உட்பட லண்டனின் முக்கியமான இடங்களில் உளவு பார்த்தார் எனும் குற்றச் சாட்டில் 36 வயதான சஃபியா ஷேய்க் ரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது சஃபியா ஷேய்க், தான் பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்ததாக, குற்றத்தினை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அவருக்கான தண்டனை மே மாதம் வழங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், ஷேய்க் கைதுசெய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், இரண்டு ரகசிய அதிகாரிகளுடன் தொடர்பை வளர்த்துக்கொண்டார்.
அந்த அதிகாரிகள் இருவரும் தீவிரவாத ஆதரவுள்ள கணவன், மனைவியாக தம்மை அடையாளப்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் ஷேய்க் தகவல்களை அனுப்பினார்.
நான் ஏராளமானவர்களைக் கொல்ல விரும்புகிறேன். அதற்காக தேவாலயத்தினைத் தெரிவுசெய்ய விரும்புகிறேன். கிறிஸ்ற்மஸ் அல்லது ஈஸ்ரர் போன்ற நாளில் ஏராளமானவரைக் கொல்லலாம் என்று அதிகாரிக்குத் தகவல் அனுப்பினார்.
நான் எப்போதும் அச்சுறுத்தல்களை அனுப்புகிறேன்.ஆனால் அந்த அச்சுறுத்தல்களை உண்மையானதாக மாற்ற விரும்புகிறேன்.
சஃபியா ஷேய்க் செயின்ற் போல்ஸ் தேவாலயத்தின் படத்தை அதிகாரிக்கு அனுப்பியதுடன் நான் நிச்சயமாக இந்த இடத்தைத் தெரிவுசெய்ய விரும்புகிறேன்.
நான் குண்டினை வெடிக்கவைக்க விரும்புகிறேன். இறக்கும் வரை சுட விரும்புகிறேன். அந்த இடத்தையும் காஃபிர்களையும் (ஐ.எஸ்ஸின் எதிரிகள்) அழிக்க விரும்புகிறேன்.
ஹோட்டலிலும், பின்னர் தேவாலயத்திலும் குண்டினை வெடிக்கவைப்பேன். நான் இறக்கும்வரை கொல்லுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு வாரத்திற்குப் பின்னர் அவர் செயின்ற் போல்ஸ் தேவாலயத்தைப் (St Paul’s Cathedral) பார்வையிட்டதுடன் அது தொடர்பான வீடியோக்களையும் அனுப்பினார்.
வெடிகுண்டுகளைத் தயார்செய்வதற்காக பெண் ரகசிய அதிகாரியிடம் ஷேய்க் இரண்டு பைகளைக் கொடுத்ததாக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அயலவர்களால் ஈர்க்கப்பட்ட சஃபியா ஷேய்க், 2007 இல் இஸ்லாத்திற்கு மாறினார். ஆனால் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு பிரதான இஸ்லாத்தை நிராகரித்தார்.
2016 ஆம் ஆண்டில் இருந்து ஐ.எஸ் மற்றும் ஏனைய ஜிஹாதிக் குழுக்களின் தீவிரவாத வன்முறைச் சித்தாந்தத்தைப் பின்பற்றத் தொடங்கினார்.
வழிபாட்டாளர்களும் இமாம்களும் தனது தீவிரவாதக் கருத்துக்களைப் பற்றி கவனத்தில்கொள்வார்கள் என்ற அச்சத்தில், சஃபியா ஷேய்க் மசூதிகளில் கலந்துகொள்வதை நிறுத்தினார்.
ஏற்கனவே அவர் குறித்து, அரசாங்கத்தின் பயங்கரவாதத் தடுப்புத் திட்டத்திற்கும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டம் தீட்டியது மற்றும் பயங்கரவாதக் கருத்துக்களைப் பரப்புவது ஆகிய குற்றங்களை சஃபியா ஷேய்க் ஒப்புக் கொண்டார்.
மே 12 ஆம் திகதி தண்டனை வழங்குவதற்கு முன்னதாக தண்டனை அறிக்கைகளை தயார் செய்யுமாறு நீதிபதி ஜஸ்ரிஸ் ஸ்வீனி (Justice Sweeney) உத்தரவிட்டார்.