அமெரிக்காவில் கணவர் இறந்த மறுநாளே குழந்தை பெற்றெடுத்த இந்திய பெண்ணுக்கு, இணையதளவாசிகள் நிதி திரட்டி வருகின்றனர்.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கொம்மிரெட்டி (38), தனது மனைவி திவ்யா மற்றும் மூன்று வயது மகளுடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸில் பணிபுரிந்து வந்த பிரசாந்த், வியாழக்கிழமை அன்று தனது அலுவலகத்தின் ஒரு சந்திப்பு அறையில் இருந்தபோது தலை சுற்றுவதாகவும், கழுத்து வலிப்பதாகவும் கூறியுள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் பிரசாந்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பக்கவாதத்தால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அன்றைய தினம் தனது பிறந்தநாள் என்பதால் கணவரின் வருகைக்காக ஆசையுடன் காத்திருந்த திவ்யாவிற்கு சோக செய்தியே கிடைத்துள்ளது.
அந்த சமயத்தில் கர்ப்பிணியாக இருந்த திவ்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மறுநாள் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்கிடையில் பிரசாந்தின் சக ஊழியர் Woody Green, ஆன்லைன் மூலம் திவ்யா குடும்பத்திற்கு நிதி திரட்ட ஆரம்பித்தனர். அதில் ரூ. 2.7 கோடி வரை நன்கொடைகள் திரட்டப்பட்டுள்ளதாக தெலுங்கானா டுடே தெரிவித்துள்ளது.