துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டின் உள்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் வான் மாகாணத்தை மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 கொல்லப்பட்டதாகவும் 5 பேர் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரிக்டர் அளவில் 5.7 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் சுமார் 1,066 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
அதிகாலை நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் மீட்புப் பணிகளைத் தொடங்கியது என உள்விவகார அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் துருக்கி-ஈரான் எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 5 கிமீ (3.1 மைல்) ஆழத்தில் இருந்தது என்றும் ஈ.எம்.எஸ்.சி குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் உள்ள மொத்தம் 43 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.