கைது செய்யப்பட்டு தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை அவரின் வெளிநாட்டுப் பயணத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும் ரஞ்சனிடமிருந்து கைப்பற்றப்பட்ட இறுவட்டுக்களில் பதிவாகியிருந்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் பகுப்பாய்வுகளை மேற்கொண்ட அரச பகுப்பாய்வாளர்கள், அது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு என்பதையும் உறுதி செய்துள்ளதாக இன்று நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் கடந்த மாதம் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸார் தீடீர் சோதனை நடவடிக்கை மேற் கொண்டிருந்தனர்.
அதன்போது அவரது வீட்டிலிருந்து ஒரு தொகை இறுவட்டுக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இந்த இறுவட்டுக்கள் தொடர்பான விடயம் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் மூலமாகத்தான் வெளிவந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.