கல்வியமைச்சில் உரியதரப்புக்கள் இல்லாத காரணத்தால் வெறும் வாய்மொழிமூல உத்தரவாதங்களை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்கள் செல்லவில்லையென தெரிவித்துள்ளது இலங்கை ஆசிரியர் சங்கம்.
இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தை அறிவித்ததுடன், கல்வியமைச்சின் எதிரே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் கூடிய தொழிற்சங்கங்கள் இடைக்கால சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிருபம் உடனடியாக வெளியிடப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன்
நாளை 27 ஆம் திகதி முதல் சகல அதிபர் ஆசிரியர்களும் காலை 7.30 மணிமுதல் மாலை 1.30 வரையும், மலையக பாடசாலைகளில் 8.00 – 2.00 மணி வரையும் மட்டுமே பாடசாலை செயற்பாடுகளை மேற்கொள்வர்.
ஏனைய மேலதிக செயற்பாடுகள் அனைத்தையும் புறக்கணிப்பதுடன் அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர்.
உரிய தீர்வு கிடைக்கவில்லையெனின் மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக சுகயீன லீவுப் போராட்டம் இடம்பெறும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஏமாற்றி வரும் இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.