கொரோனா பரவல் அச்சத்துக்கு மத்தியில் ஈரானிய நாடாளுமன்றம் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சட்டமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஈரானிய சட்டமன்றத் செய்தித் தொடர்பாளரான அசாதுல்லா அப்பாஸி தகவல் வெளியிடுகையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை நாடாளுமன்றம் எந்த அமர்வுகளையும் நடத்தாது என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் பரவலால் சீனாவுக்கு வெளியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். அங்கு பொது மக்களின் நடமாட்டம் பொது வெளியில் வெகுவாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தொற்றுநோயை சமாளிக்க முயற்சிக்கும் பணிக்குழுவிற்கு தலைமை தாங்கிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி உட்பட நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், ஈரானில் கொரோனா தொடர்பான உயிரிழப்புக்களும் 34 ஆக பதிவாகியுள்ளமை சுட்டிக்காத்தக்கது.