அரச தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ள அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஒருவருட பயிற்சிக் காலத்தின் அடிப்படையில் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படும் இவர்களுக்கு 20,000 ரூபா பயிற்சிக்கால சம்பளமாக வழங்கப்படவுள்ளது.
நாட்டில் 50,000 வரையான பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்றிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டது. அதன்படி அனைவரிடமும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அரச தொழில்வாய்ப்புகளுக்காக விண்ணப்பித்த அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் இன்று நியமனம் வழங்கப்படவுள்ளது. மார்ச் முதலாம் திகதி முதல் அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையிலேயே நியமனம் வழங்கப்படுகிறது.
ஒருவருடகாலம் இவர்களுக்கு பயிற்சிக் காலமாகும். இக் காலப்பகுதியில் 20,000 ரூபா சம்பளமாக வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் முறையான அரச சம்பளப் பட்டியலுக்குள் உள்வாங்கப்படுவார்கள்.
நியமனம் பெறும் இடத்தில் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அதன் பின்னரே இடமாற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அரச சேவையை வறுமையான பிரதேசங்களுக்கு கொண்டுசெல்லும் நோக்கில் இவர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது என்றார்.
வழமையாக நியமனம் எடுத்து இரண்டு வருடங்களில் வீட்டுக்குப் பக்கத்தில் இடமாற்றம் பெற்று செல்லும் பட்டதாரிகளிற்கு ஜனாதிபதி வைத்த இந்த ஆப்பு பொதுமக்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிதி ஒதுக்கீடு இல்லாமல் ‘சப்ரிகம’ இன்று ஆரம்பம்
நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து நாடு முழுவதும் அவசர அவசரமாக ‘சப்ரிகம’ திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் எவையும் உரிய வகையில் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இந்தத் திட்டம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ரணில் அரசு, கிராமிய உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டத்துக்கு (ஆர்.ஐ.டி.பி.) ஒதுக்கிய நிதியிலிருந்து சிறு தொகை நிதியே, இவ்வாறு மாற்றப்பட்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கோட்டாபய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் சப்ரிகம திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கிராமத்துக்கும் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் அபிவிருத்தித் திட்டங்கள் இனங்காணப்பட்டிருந்தன. அவை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்தத் திட்டம் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
நாளைமறுதினம் திங்கட்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், இந்தத் திட்டங்களுக்கான அடிக்கல் நடுகைகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதமர் ஊடாக முன்னெடுக்க முடியாது. அதற்காகவே அவசர அவசரமாக இந்தத் திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு கிராமத்துக்கும் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுக்குரிய வேலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்தத் திட்டத்தின் மொத்த நிதியின் 20 சதவீதமே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும், ரணில் அரசு கிராமிய உட்கட்டுமான அபிவிருத்திக்கு கணக்கறிக்கை ஊடாக ஒதுக்கிய நிதியையே, இந்தத் திட்டத்துக்கு கோட்டாபய அரசு ஒதுக்கியுள்ளது.
சப்ரிகம திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக எஞ்சிய நிதியை ஒதுக்கவேண்டும். அவ்வாறு ஒதுக்கப்படாவிட்டால் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முடியாது இடைநடுவில் நிறுத்தவேண்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.