இலங்கையில் தற்போது சுற்றாடல் வெப்பநிலை வழமை நிலையிலும் பார்க்க உயர் மட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகரித்துள்ள வெப்பநிலையால் உடலில் ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இக் காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 65வயதுக்கு மேற்பட்டவர்கள், உடற்பருமன் கூடியவர்கள்,நோயாளர்கள் தொடர்பில் அதிகூடிய கவனம் தேவையென்றும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சு இது தொடர்பில் விடுத்துள்ள அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ளதாவது,
உஷ்ண நிலையை குறைப்பதற்காக அதிக தண்ணீரைப் பருக வேண்டும். அனைத்து வயதைச் சேர்ந்தவர்களும் தமது உடலால் தாங்கிக்கொள்ளக்கூடிய உடல் உழைப்பை மட்டுமே முன்னெடுக்க வேண்டும். உடற்பயிற்சி செய்பவர்கள் மாலை நேரங்களில் நிழலான இடங்களில் உடற்பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன் அடிக்கடி உடற்பயிற்சி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளையும் சிறுவர்களையும் வெட்டவெளியில் விளையாட அனுமதிக்கக்கூடாது. அவர்களை குளிரூட்டப்பட்ட அறையில் அல்லது மின்விசிறியின் கீழ் இருக்கச் செய்ய வேண்டும்.
பருத்தியிலான ஆடைகளை அணியும் அதேநேரம் குறைவான ஆடைகளையே அணிய வேண்டும். நேரடி வெயிலுக்குச் செல்லும்போது தொப்பி அல்லது குடையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
வெப்பமான உணவு அல்லது திரவம் விசேடமாக சூடான தேனீரைப் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறானோர் அதிக வெப்பத்தில் அல்லது சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
கூடுதலான குளிர் அல்லது இனிப்புடனான பானங்களை அருந்துவது பொருத்தமற்றதாகும். மதுசாரங்களை பயன்படுத்துவதும் ஏற்புடையதாகாது.
நபர் ஒருவர் உடல் சோர்வுக்கு உள்ளாகும் பொழுதும், மூச்சு எடுப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுமாயின் உடனடியாக பணிகளை நிறுத்தி நிழல் உள்ள இடம் அல்லது குளிர் இடங்களில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலைப் பாரம் அல்லது மயக்க நிலை ஏற்படுமாயின் ஏனையோருக்கு தெரிவிக்க வேண்டும். சூரிய ஒளியினால் சருமம் சிவக்கக்கூடும். உடல் அரிப்பும் ஏற்படக்கூடும். சில வேளைகளில் தீக்காயம் அல்லது கொப்பளங்கள் ஏற்படக்கூடும். சன் கிறீம் மூலம் இவற்றை தடுக்க முடியும். சருமத்தில் அரிப்பு விசேடமாக, கழுத்தில், மார்பில் அல்லது மார்புக்கு அருகாமையில் ஏற்படக்கூடும்.
கடும் வெப்பத்தின் காரணமாக சிலருக்கு (Heat Strokes ) வெப்ப பக்கவாதம் ஏற்படக்கூடும். வெப்பத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனால் மூளை மற்றும் நரம்பு கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
பக்கவாதமும் ஏற்படக்கூடும். இலங்கையில் பக்கவாதம் பெருமளவில் காணப்படுகின்றது. விசேடமாக கடும் வெப்ப காலநிலையில் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும்.
சிறுவர்கள், 4 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் வெப்பநிலை மாற்றத்துக்கு மத்தியில் தமது உடல் வெப்பநிலையை சமனான நிலையில் வைத்துக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
புத்திசாலித்தனத்துடன் செயற்படுதல் மற்றும் உரிய வைத்திய ஆலோசனையை பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான அதிக வெப்பநிலையுடனான காலத்திலான பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என்று சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.