சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் பரவி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்பொழுது 60 நாடுகளில் பரவி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் சீனாவில் மட்டும் இதுவரை 2,835 பேர் உயிரிழந்துள்ளதுடன் 79,257 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் சீனாவிலிருந்து தொலைதூரத்தில் உள்ள அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கெல்லாம் வைரஸ் பரவியுள்ள நிலையில் சீனாவுக்கு மிகவும் அருகில் உள்ள வடகொரியாவில் வைரஸ் பரவியதற்கான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கொரோனா வைரஸ் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதன்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டம் மக்களை பாதுகாப்பதற்கான மிக முக்கிய நடவடிக்கை என்றும், அதில் அதிகபட்ச கவனம் தேவை என்றும் அதிகாரிகளுக்கு, கிம் ஜான் உன் அறிவுறுத்தியதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இத்தனை கட்டுப்பாடுகளை மீறி, கொரோனா நாட்டிற்குள் நுழைந்தால், அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என அதிபர் அதிகாரிகளை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
வடகொரியாவில் மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதால் அதிபர் இவ்வளவு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஊழல் செய்த குற்றச்சாட்டின் பேரில் வடகொரியாவில் இரண்டு மூத்த அதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் தங்கள் நாட்டில் கொரோனா பரவுவதை தடுக்க, கொரோனா பாதித்த ஒருவரை, ஈவிரக்கமின்றி அந்நாட்டு அதிகாரிகள் சுட்டுக்கொன்றிருந்தனர்.
வடகொரியாவில் கொரோனா பரவுவதை தடுக்க ஏற்கனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகள் வடகொரியா செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் பல சர்வதேச விமானங்கள் மற்றும் ரயில்கள் என்பன ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், சீனாவுக்கு அடுத்தபடியாகத் தென் கொரியாவில்தான் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வடகொரியாவிலும் நிச்சயம் வைரஸ் பரவியிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.