தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே அன்றி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக போர் நடத்தவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த போதிலும் கடந்த குறுகிய நாட்களில் அதிக பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அநுராதபுரம் – இபலோகம போதிருக்காராமய விகாரையில் இன்றைய தினம் நடைபெற்ற சமய நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விசேட அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“எமக்கு குறுகிய நாட்களில் பல பிரச்சினைகளை சந்திக்கவேண்டியிருந்தது. ஜெனீவாவில் எமது நாட்டை காட்டிக்கொடுத்திருந்தார்கள்.
அங்கு செய்துகொள்ளப்பட்டிருந்த காட்டிக்கொடுப்பு தீர்மானத்திலிருந்து விலகி இணை அனுசரணையில் தொடர்புபட முடியாது என்பதை நாங்கள் தெளிவாக அறிவித்துவிட்டோம். நாங்கள் போர் செய்தோம்.
அந்தப் போரானது தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராகவே போராடினோம்.
30 வருடங்களாக போரினால் பாதிக்கப்பட்டோம். எமக்கு உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும் பலர் உயிரிழந்தார்கள். ஆகவே தினமும் உயிர் அச்சுறுத்தலில் இருந்தோம்.
குண்டுகள் வெடிக்குமோ என்ற பயத்தில் ஆலயம், விகாரைகளுக்கு செல்ல அச்சம் இருந்தது. அப்படியொரு யுகம் எமக்கு இருந்தது. அதனை இன்று மறந்துவிட்டார்கள்.
அந்தநிலையை மாற்றவே பயங்கரவாதத்திற்கு எதிராக போராடினோமே தவிர, ஓர் இனத்திற்கு எதிராக அல்ல என்பதை தெளிவாக தெரிவிக்க விரும்புகிறோம்.
அதன் காரணமாகவே மனித உரிமைப் பிரச்சினை ஏற்பட்டது. போர் முடிந்த காரணத்தினால்தான் வடக்கு மக்களுக்கு வீதிப்போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் வசதிகளை வழங்கமுடிந்தது.
அந்த அபிவிருத்திகள் கடந்த 5 வருடங்களாக பின்வாங்கின. அவ்வாறு கைவிடப்பட்ட அபிவிருத்திகளை மீண்டும் தொடர்வதற்கு எமக்கு நேரிட்டுள்ளது.” என கூறினார்.