கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்த ஆண்டில் ஆசிய-பசிபிக் பொருளியலுக்கு 211 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்படக்கூடும் என்று எஸ்&பி குளோபல் என்ற பொருளியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்து இருக்கிறது.
ஆசிய-பசிபிக்கில் 10 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பொருளியல் வளர்ச்சி குறைந்துவிடும் என்றும் அது அபாயச் சங்கு ஊதி உள்ளது.
கொரோனா கிருமியிலிருந்து தப்பிக்க உலக நாடுகள் பெரும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கைகள் இடம்பெற்று இருக்கின்றன.
இந்தக் கிருமிகள் பரிணமித்த சீனாவில் பொருளியல் வளர்ச்சி 3 விழுக்காடு கூட இருக்காது என்றும் ஜப்பான், அவுஸ்திரேலியா, ஹொங்கொங் ஆகியவை மந்தத்தில் சிக்கிவிடக்கூடும் என்றும் அறிக்கை ஒன்றில் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது,
ஹொங்கொங்கில் 2008க்கு பிறகு முதன்முதலாக சென்ற ஆண்டு பொருளியல் மந்தம் ஏற்பட்டது.
இப்போதைய நிலவரம் அதைவிட மோசமாக இருப்பதுபோல் தெரிகிறது.
சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டதால் சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் நாடுகளைப்போல ஹொங்கொங்கும் பெரும் சங்கடத்தை எதிர்நோக்குகிறது.
கொரோனா சீனாவில் டிசம்பரில் தலையெடுத்து 85 நாடுகளுக்குப் பரவிவிட்டது. உலக நிதிச் சந்தைகளையும் பங்குச் சந்தைகளையும் நிலைகுலையச் செய்துவிட்டது.
ஆசிய-பசிபிக் வட்டாரம் 4 விழுக்காடுதான் இந்த ஆண்டில் வளரும் என்று எஸ்&பி நிறுவனம் கணித்துள்ளது. இந்தக் கணிப்பு சென்ற டிசம்பரில் 4.8 விழுக்காடாக இருந்தது.
கொரோனா காரணமாக, ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் பொருளியல் வளர்ச்சியை, இருள் சூழ்ந்து இருக்கிறது என்று இந்த நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
ஜப்பான், கொரியாவில் தேவை-உற்பத்தி இரண்டுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்துவிட்டது.
இதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமை ஜப்பான், கொரிய நாடுகளுக்கு ஏற்படும்.
பயனீட்டாளர்கள் பணம் செலவு செய்வதை கொரோனா கிருமி தடுத்து இருக்கிறது. அதேவேளையில், தொழில்துறைகளை முடக்கி உற்பத்தியையும் குறைத்துவிட்டது. இதனால் இரண்டு பக்கமும் பொருளியல் அடிவாங்கி வருகிறது.
சீனப் பொருளியல் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகக் குறைவாக இந்த ஆண்டில் 4.8 விழுக்காடுதான் வளரும் என்றும் இன்னும் நிலைமை மோசமாக அங்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
இருந்தாலும், உலகப் பொருளியல் நல்லபடி தலைதூக்கிவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் எஸ்&பி குறிப்பிடுகிறது.