ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 168 பேர் மரணமடைந்துள்ள நிலையில் இத்தாலி அரசு ஒட்டு மொத்த குடிமக்களையும் தீவிர கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளது.
இதுவரை கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலியின் ஒருபகுதி மட்டுமே முடக்கப்பட்டிருந்த நிலையில்,
தற்போது ஒரே நாளில் 168 பேர் பலியானதை அடுத்து ஒட்டுமொத்த இத்தாலியும் உச்சகட்ட கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொது இடங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் மூன்று அடி இடைவெளி விடவேண்டும் என்று இத்தாலி அரசாங்கம் புதிதாக விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாக வணிக வளாகங்களுக்கு வெளியே வரிசைகள் நீண்டுள்ளன.
நோய் அறிகுறிகளுடன் காணப்படும் எவரும் குடியிருப்புகளில் இருந்து வெளியே செல்வது குற்றச்செயல் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,
ஒட்டுமொத்த இத்தாலியும் தற்போது கண்காணிப்பு வளையத்தில் இருப்பதால், எதிர்காலம் கருதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் இத்தாலியின் நகரங்கள் வெறுச்சோடி காணப்படுவதுடன், பொதுமக்களின் நடமாட்டம் அரிதாக காணப்படுகிறது.
மட்டுமின்றி முக்கிய பகுதிகளில் பொலிசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், பொதுமக்கள் கண்டிப்பாக குடியிருப்பில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளை ஒதுக்கும்போது வயது மற்றும் உயிர்பிழைக்கும் வாய்ப்புகளை பரிசீலிக்க மருத்துவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 10,149 பேர் இலக்காகியுள்ளனர். சீனாவுக்கு வெளியே கொரோனா பாதிப்புக்கு அதிகமானோர் இலக்காகும் நாடாக இத்தாலி மாறியுள்ளது.
மட்டுமின்றி ஒரேநாளில் சுமார் 977 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 168 என தெரியவந்துள்ளது.
சீனாவுக்கு வெளியே கொரோனாவால் அதிக மரணம்(631) ஏற்பட்டுள்ளது இத்தாலியில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.