ஸ்பெயினில் வயதான பெண் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டதும் கண்ணீருடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
மாட்ரிட்டில் இயங்கி வரும் மருத்துவமனை ஜெனரலில் கொரோனா சிகிச்சை பெறுவதற்காக சென்ற வயதான பெண் ஒருவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க மறுத்து வெளியேற்றியுள்ளனர்.
இதனால் மருத்துவமனைக்கு வெளியே அவர் மூச்சுத்திணறலுடன் கண்கலங்கியபடியே அழுதுகொண்டிருப்பதை, அங்கிருந்த பிபிசி பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோவாக படம்பிடித்துள்ளார். உள்ளூர் ஊடக தகவல்களின்படி, அந்த வயதான பெண்ணின் கணவர் நேற்றைய தினம் இரவு உடல்நலக்குறைவால் அதே மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் உடல்நலக்குறைவால் இருந்த அந்த வயதான பெண், கொரோனா சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்களிடம் முறையிட்டுள்ளார்.
ஆனால் மருத்துவர்கள், கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் அளவிற்கு அவர் உடல்நிலை சரியில்லாமல் இல்லை எனக்கூறி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
மேலும், வீட்டில் சுய தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அந்த பெண், மருத்துவமனைக்கு வெளியே அழுதுகொண்டிருந்ததாகவும், அவரை அவருடைய குழந்தைகள் தேற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வளர்ந்து வரும் கொரோனா நெருக்கடியை சமாளிக்க ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற மருத்துவமனைகள் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களை முறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் 80 வயதிற்கு மேற்பட்டவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேறும் திட்டங்களை இத்தாலி நடைமுறைப்படுத்த உள்ளது.



















