இலங்கையில் முதலாவதாக கொரோனா நோய் தொற்றுக்குள்ளான இலங்கையர் குணமடைந்துள்ளார் என வைத்தியசாலையின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அங்கொடை தேசிய தொற்றுநோயியல் சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது குணமடைந்துள்ளார்.
சுற்றுலாத்துறை வழிகாட்டியாக பணியாற்றும் 50 வயதான ஒருவரே கடந்த வாரம் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சேர்ந்து பயணித்துள்ளார். இதன்போதே, அவர் தொற்றிற்கு இலக்காகினார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தி சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்த அவர் குணமடைந்துள்ளார் எனவும், தொடர்ந்து வைத்திய சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரான சுற்றுலா வழிகாட்டியின் மகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி தொண்டை வலி மற்றும் தலைவலி காரணமாக அவரது மகன், அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வீடு திரும்பியதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.