அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளே கொரோனா பரவலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் நிலையில், தங்கள் நாட்டில் வைரஸ் தொற்றால் எவரும் பாதிக்கப்படவில்லை என வடகொரியா அறிவித்ததன் உண்மை நிலை வெளியாகியுள்ளது.
சீனா, ரஷ்யா, தென்கொரியாவை அடுத்துள்ள நாடு வடகொரியா. இது தென்கொரியாவைவிட அதிக பரப்பளவை கொண்டிருந்தாலும் இங்கு மக்கள் தொகை குறைவே.
பொதுவாகவே வெளி உலகுடன் எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தனிமையிலேயே இருந்துவரும் வடகொரியாவில்,
சுற்றுலா பயணிகள், வர்த்தகத்திற்காக அங்கு செல்பவர்கள் அனைவரும் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இதனால் அந்நாட்டிற்கு பயணம் செய்யக்கூடிய வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் வெகு சொற்பமே.
கொரோனா வைரஸின் பூர்வீகமான சீனாவும், வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்ட நாடுகளில் ஒன்றான தென்கொரியாவும் வடகொரியாவுடன் எல்லையை பகிர்கின்றன.
இப்படி இருக்கையில் இங்கு எப்படி வைரஸ் பரவாமல் இருக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையிலும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகள் குறித்து புள்ளிவிவரங்களை வடகொரியா வெளியிடவில்லை.
வெளியுலகுடனான தொடர்பை துண்டித்ததால் தங்கள் நாடு வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டதாகவும் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்றும் வடகொரியா கூறுகிறது.
அதற்கு காரணம் தங்கள் நாட்டு எல்லைகளை ஜனவரியில் இருந்தே முழுமையாக அடைத்து விட்டதாகவும், அண்டை நாடுகளுடனான ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை முற்றிலும் தடை செய்துவிட்டதாகவும் வடகொரியா சொல்கிறது.
மட்டுமின்றி நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் மீதான பயம் காரணமாக அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் வடகொரியாவில் கட்டாயம் இந்த வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டிற்கான அமெரிக்காவின் ராணுவ கமாண்டர் ஜெனரல் ராபர்ட் அப்ரம்ஸ் தெரிவிக்கிறார்.
மேலும், சீனாவுடனான எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 180 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று இருப்பதாகவும் தென்கொரியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக வடகொரியாவில் ராணுவ நடவடிக்கைகள் குறைந்து வீரர்களின் நடமாட்டமே இல்லாமல் இருந்தது,
ஒரு மாதத்தில் ஒரு விமானம் மட்டுமே பறந்தது என இப்பகுதியை கண்காணிக்கும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மட்டுமின்றி சீனா சென்று வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வடகொரிய அரசு தனிமைப்படுத்தியதாகவும்,
மீறி பொது இடத்துக்கு சென்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கடந்த பிப்ரவரியில் தகவல்கள் வந்தன. வடகொரிய அரசு இதுவரை கொரோனா பரவல் குறித்து உத்தியோகப்பூர்வமாக பேசவில்லை.
இதனால் ஊடகங்கள் வட கொரியாவின் உண்மை நிலை என்னவென்று இதுவரை உலக மக்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.