நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்ப்பட்டுள்ள நிலையில்,
கிளிநொச்சி நகரில் மக்கள் நடமாட்டமோ வாகன போக்குவரத்துகளோ இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
எனினும் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர ஆங்காங்கே ஊரடங்குச் சட்டத்தை மீறும் வகையில் வீதிகளில் பயணிப்போர் பொலீஸாரினால் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று மாலை ஆறு மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை ஆறு மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்திற்கு கிளிநொச்சி மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளதனால் கிளிநொச்சியில் மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அங்கு வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் கூறப்படுகின்றது.
எனினும் வீதிகளில் ஆங்காங்கே பொலிசார் குவிக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அவ்வப்போது பயணிக்கும் வாகனங்கள், பயணிகள் பொலிசாரால் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன், நடமாட்டத்தை குறைப்பதற்கான அறிவுறுத்தல்களும் பொலிசாரால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.