இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆகும் என சுகாதார துறை அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
77 நோயாளர்களில் 69 பேர் அங்கொட தொற்றுநோய் தேசிய வைத்தியசாலையிலும், 04 பேர் அநுராதபுரம் பொது வைத்தியசாலையிலும் 03 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவர்களில் 48 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் என்பதோடு, 17 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பை கொண்ட நபர்கள் ஆவர். எஞ்சியோருக்கு நோய் ஏற்பட்ட முறை குறித்த விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
தற்பொழுது இலங்கையில் 22 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3063 ஆகும். இவர்களில் 31 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
இது தவிர சுகாதார பிரிவு, இராணுவம், புலனாய்வு பிரிவு பொலிஸ் மற்றும் பொது மக்கள் சுகாதார பரிசோதகர்களினால் அடையாளம் காணப்பட்ட, சுமார் பத்தாயிரம் பேர் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கடைப்பிடித்து செயல்படுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பில் கொரோனா வைரஸிற்காக சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.