கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க சோதனையில் உள்ள ஆண்டிமலேரியல் மருந்துகள் ‘கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நிரூபிக்கப்படாத மருந்துகளை அதிகப்படியாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்த போதிலும் டிரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சில மருந்துகள் உதவியுள்ளதாக பிரான்ஸ் மற்றும் சீனாவில் ஆரம்பகால ஆய்வுகள் உறுதியளித்தன.
இதைத்தொடர்ந்து, அதனுடன் தொடர்புடைய கலவையான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயின் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தனது நிர்வாகம் செயல்படுவதாக டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார்.
அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணரான அந்தோனி பௌசி உட்பட பல விஞ்ஞானிகள், பெரிய மருத்துவ பரிசோதனைகள் சிறிய ஆய்வுகளை உறுதிப்படுத்தும் வரை எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் திங்களன்று நடந்த வெள்ளை மாளிகையின் செய்தியாளர் கூட்டத்தில் டிரம்ப் அத்தகைய கட்டுப்பாட்டை வலியுறுத்தவில்லை.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் இசட்-பாக் கலவையாக மிகவும் நன்றாக இருக்கிறது, இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இது கடவுளிடமிருந்து கிடைத்த பரிசாகும், அது வேலை செய்தால் பெரிய மாற்றியாக இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.
டிரம்ப் குளோரோகுயின் பற்றி பேசுவதைக் கேட்ட அம்மருந்தை உட்கொண்ட அரிசோனாவை சேரந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோய் மீன்களுக்கு சிகிச்சையளிக்க குளோரோகுயினின் ஒரு வடிவத்தை எடுத்துக் கொண்டதால் அப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டதாகவும் உள்ளுர் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
குறித்த மருந்தை மிகைப்படுத்தியதாக டிரம்ப்பை விஞ்ஞான சமூகத்தில் சிலர் விமர்சித்தனர்.