கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகில் எந்த நாட்டிலும் இதுவரை பதிவு செய்யப்படாத பலி எண்ணிக்கையை இத்தாலி கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்துள்ளது.
உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 919 பேரை பறிகொடுத்துள்ளது ஐரோப்பிய நாடான இத்தாலி.
கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் வகையில் நாடு மொத்தமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றில் இருந்து இன்று குறைந்து காணப்பட்டாலும் பலி எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.
இத்தாலியின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அக்டுமையாக இருக்கும் என நிபுணர்கள் கணித்திருந்தனர்.
ஆனால் பிராந்திய அதிகாரிகள் நெருக்கடி தொடர்பில் நேரெதிரான கருத்துகளை பதிவு செய்திருந்தனர்.
இதனிடையே இத்தாலியில் நான்கு முக்கிய மருத்துவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
இத்தாலியில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 86, 498 பேர் இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,909 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 919 பேர் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 9,134 என தெரியவந்துள்ளது.