கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டோர் 117 பேர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி இன்று இரவு 7.45 மணியாகும் போது மொத்தமாக இரு வெளிநாட்டவர்கள் உட்பட 106 பேர் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இரு வெளிநாட்டவர்கள் உட்பட 96 பேர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும், 9 பேர் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ள நிலையில், அவர்கள் அவ்வந்த வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று மட்டும் சிலாபம் மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இருந்து இருவரும் நேற்று 9 பேரும் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டிருந்தனர்.
இதனிடையே தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு நாளை காலை 6.00 மணிக்கு 19 மாவட்டங்களில் தளர்த்தப்படவுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இவ்வாறு ஊரடங்கு நாளை காலை தளர்த்தப்படுகின்றது.
அவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீள பிறப்பிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. எனினும் கொரோனா தொற்று பரவலை மையப்படுத்தி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பதிவான முதல் மரணம் நேற்று சம்பவித்திருந்தது. 60 வயதான மாரவில பகுதியைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட 4 ஆவது தொற்றாளராக அடையாளம் கணப்பட்ட நபரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
அவருக்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முதல் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலதிகமாக நீரிழிவு மற்றும் அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த குறித்த நபரின் இறுதிக் கிரியைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் நியமங்கள் மற்றும் தொற்று நோய் சட்ட விதிகளுக்கு அமைய கொட்டிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றது.
சட்டவைத்திய அதிகாரி சன்ன பெரேராவின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர்கள், முல்லேரியா பொலிசாரின் கட்டுப்பாட்டில் இந்த இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.
இதன்போது, உயிரிழந்த நபரின் உறவினர்கள் இருவர் மட்டும் பங்கேற்றிருந்தனர். அவரது மனைவி பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பங்கேற்கவில்லை. குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாக முதல், ஜேர்மனியில் இருந்து வந்த சுற்றுலா குழுவொன்றுக்கு வழிகாட்டியாக செயற்பட்டிருந்தார்.
இதனிடையே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் அதிகமானோர் கொழும்பிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் அடையாளம் காணப்பட்டோர் 29 பேராவர். களுத்துறையில் 17 பேரும் புத்தளத்தில் 12 பேரும் கம்பஹாவில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரியில் அடையாளம் காணப்பட்டுள்ளோர் நால்வராவர்.
இதனிடையே மேலும் 117 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 21 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.