கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் அதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு, இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே பரவி இருக்க வேண்டும் என்றும் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து பாதிப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, சீனாவின் வுஹான் மாகாணத்தில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்படுவதற்கு முன்பே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்க வாய்ப்பு உள்ளது.
உண்மையில், இது பல ஆண்டுகளுக்கு முன்பே இப்படி நடந்திருக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன. இந்த வைரஸ் விலங்குகளுக்கு உருவாகி மனிதனுக்கு பரவி, பின்னர் பல ஆண்டுகளாக படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்ததன் விளைவாக, இந்த வைரஸ் இறுதியில் மனிதரிடமிருந்து மனிதனுக்கு பரவி தீவிரமாகி இருக்கிறது.
பெரும்பாலும் இந்த கொரோனா வைரஸ் வகைகள் உயிருக்கு ஆபத்தான நோயை உருவாக்கும் திறனைப் பெற்றது என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரான்சிஸ் காலின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் கூறியிருக்கிறார்.
கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஆண்டர்சன், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ரம்பாட், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயன் லிப்கின், சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் ஹோம்ஸ் மற்றும் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் கேரி ஆகியோர் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வை நடத்தினர்.
சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய இந்த ஆய்வு மார்ச் 17 அன்று நேச்சர் மெடிசின் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது. மரபணு வரிசை இந்த ஆய்வின் முடிவில் நம்மால் அறியப்பட்ட கொரோனா வைரஸ்களில் உள்ள மரபணு வரிசை தரவுகளை ஒப்பிட்டு பார்த்ததில் SARS-CoV-2 இயற்கையாகவே உருவானது என்பதை நாம் உறுதியாக தீர்மானிக்க முடியும் என்று முன்னணி ஆராய்ச்சியாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விளக்கம் அளித்துள்ளார்.
இது ஒருபுறம் எனில், இத்தாலிய பேராசிரியர் கியூசெப் ரெமுஸி கடந்த நவம்பரிலிருந்து இத்தாலியில் விசித்திரமான நிமோனியா வைரஸ் பரவி வருவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் அதை பற்றி மக்கள் பலரும் அறியும் முன்பே கொரோனா வைரஸ் குறித்த தகவல் ஐரோப்பாவை அடைந்திருக்கலாம் என்று சொல்கிறார்.
பெய்ஜிங்கில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் கூறுகையில், கடந்த ஆண்டு பல நாடுகளில் நிமோனியா வைரஸ் பரவியது குறித்து நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
எனவே முழு விடயமும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் என்றார். மற்ற நாடுகளைப் போலவே சீனாவின் வுஹானில் உள்ள மருத்துவர்களும் டிசம்பரில் நிமோனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கவனித்திருக்கிறார்கள்.
கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவிய சிறிது காலத்திலேயே, சீன விஞ்ஞானிகள் SARS-CoV-2ன் மரபணுவை வரிசைப்படுத்தி, அந்த தகவலை உலகளவில் ஆராய்ச்சியாளர்களுக்கு உடனே கிடைக்கச் செய்திருக்கிறார்கள்.
ஆனால் அதற்குள் இந்த வைரஸ் உடனடியாக தொற்றுநோயாக உலகம் முழுவதும் பரவியதால் பலரை பாதித்துள்ளது.