பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், இதுநாள் வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் பாதிக்கப்பட்டவர்களோடு, இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதில் நோயாளிகள் சிலர் ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 509-பேர் பலியாகியிருப்பதாகவும், இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,032-ஐ தொட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, மருத்துவமனைகளில் இறந்த நோயாளிகளை மட்டுமே குறிக்கிறது, இதைத தவிர வீடுகள், முதியவர்களில் இல்லங்களில், இறந்தவர்கள் தரவுகளில் சேர்க்கப்படாததால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது பிரான்சில் இதுவரை பதிவு செய்யப்பட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகமானது.
பிரான்சின் சுகாதார பணிப்பாளர் Jérôme Salomon, மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 24, 639-ஆக உயர்ந்துள்ளது. இது செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும் போது, 1,882-பேர் அதிகம்.
செவ்வாயன்று 5,565 ஆக இருந்த தீவிர சிகிச்சையில் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 6,017 ஆக கடுமையாக உயர்ந்துள்ளது.
பிரான்சில் தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கை சுமார் 5,500 ஐத் தாண்டிவிட்டதாக சாலமன் கூறியுள்ளார்.
தீவிர சிகிச்சையில் உள்ளவர்களில் 34 சதவீதம் பேர் 60 வயதில் இருந்து 80 வயதிற்குட்பட்டவர்களாக இருப்பதாகவும், அதற்கு அடுத்தபடியாக 30 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,491 பேர் இந்த வைரஸில் இருந்து மீண்டு வந்துள்ளதன் மூலம், நாட்டில் 10,935 நோயாளிகள் வைரஸிலிருந்து மீண்டு வந்ததுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.