கொரோனா அறிகுறிகள் தீவிரமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன், தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள புனித தோமையார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பிரதமர் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சிப் பொறுப்பை வெளிவிவகார செயலாளர் டொமினிக் ராப் முன்னெடுப்பார் என தெரியவந்துள்ளது.
55 வயதான பிரதமர் ஜான்சனுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படலாம் என்ற நிலையிலேயே தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் ஜான்சன் கடந்த 11 நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்புக்கு இலக்கானார். அன்று முதல் அவர் சுய தனிமைப்படுத்தலில் இருந்து வந்துள்ளதுடன், அலுவலக பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
விரைவில் குணமடைந்து திரும்புவார் என்ற நிலையில், அவரது நோய் அறிகுறிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவ குழுவினரின் ஆலோசனையை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பிரதமர் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது முதல் அரசியல் வட்டாரத்தில் இருந்து பலர் பிரதமர் ஜான்சன் நலம்பெற்று திரும்ப வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.