வடக்கு லண்டனில் உள்ள பாலியல் தொழில் நடக்கும் விடுதிகளில் வேலை செய்வதற்காக பிரேசிலில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்த கும்பல் தொடர்பில் பொலிசார் விசாரித்து வரும் நிலையில் இருவரை கைது செய்துள்ளனர்.
29 வயதான ஆண் மற்றும் 28 வயதான பெண் ஆகிய இருவரும் மனித கடத்தலில் ஈடுபட்டதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் நேற்று காலை பொலிசார் அவர்களை கைது செய்தனர்.
அதாவது, போலியாக உதவித்தொகை வழங்குவதாக கூறி பெண்களை ஏமாற்றி பிரித்தானியாவுக்கு அழைத்து வரும் கும்பலை சேர்ந்தவர்கள் தான் இந்த இருவரும் என பொலிசார் நம்புகிறார்கள்.
அப்படி அழைத்து வரப்படும் பெண்கள் தங்களின் விமான செலவு, தங்குமிடம் மற்றும் கல்வி ஆகியவற்றின் செலவுகளை திருப்பிச் செலுத்துவதற்காக விபச்சார விடுதிகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறை அதிகாரி Grant Anderson கூறுகையில், இது ஒரு அருமையான குழு முயற்சி. நவீன அடிமைத்தனம் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
மேலும் இது போன்ற குற்றத்தில் ஈடுபடுவோர் மீது வழக்குத் தொடர உறுதிபூண்டுள்ளோம் என கூறியுள்ளார்.



















