ரஷ்யாவில் இருந்து சிவாலயங்களை தரிசிக்க இந்தியா வந்த கோடீஸ்வரர், கையில் இருந்த பணம் மொத்தத்தையும் இழந்து பட்டினியாக அலைந்த சம்பவம் தொடர்பிலான பின்னணி வெளியாகியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்தவர் ருஸ்லான். இவர் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களை தரிசிப்பதற்காக கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியா வந்துள்ளார்.
கையில் ருத்தராட்ச மாலை, கழுத்தில் சிவன் டாலர், செல்போன் திரையில் சிவன் படம், முழு உடலை மறைக்கும் கருப்பு ஆடையுடன் ருஸ்லான் காட்சியளிக்கிறார்.
மகாசிவராத்திரி அன்று வாரணாசியில் தரிசனத்தை முடித்த கையோடு தமிழகம் வந்த ருஸ்லான், திருவண்ணாமலை ராமேஸ்வரம் , தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வழிப்பட்ட பின்னர் சென்னை வந்துள்ளார்.
28ம் திகதி கொல்கத்தா சென்று பின்னர் ரஷ்யா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், 24ம் திகதியே ஊரடங்கு அமலுக்கு வந்ததால் சென்னையில் முடங்கிவிட்டதாக கூறுகிறார் ருஸ்லான்.
கையிலிருந்த பணமும் தீர்ந்துவிட, கிரெடிட் டெபிட்கார்டுகள் வைத்திருந்த பர்சும் தொலைந்துப்போக , ரஷ்ராவில் பணக்காரரான தான் உணவுக்கே வழியின்றியும் தங்க இடமின்றியும் சென்னையில் மூன்று வாரங்களாக திரிந்து வருவதாக கூறுகிறார். இவர் கதையைக் கேட்ட வழிப்போக்கர் ஒருவர் சென்னை மாநகராட்சியை அணுகுமாறு கூறவே, ரிப்பன் கட்டிடத்தில் உள்ள பயணங்களுக்கான பாஸ் வழங்கும் கவுன்ட்டருக்கு வந்து சேர்ந்தார் ருஸ்லான்.
கொரோனா பீதி காரணமாக அங்கிருந்த மக்கள் அனைவரும் அச்சத்தோடு இவரைப் பார்த்ததால் ஒரு ஓரமாக அமரவைக்கப் பட்டிருந்தார் ருஸ்லான்.
அவரை விசாரித்த அதிகாரிகள், பாஸ்போர்ட் விசா போன்ற விவரங்களை சேகரித்து மாநகராட்சி தங்குமிடத்திற்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுத்தனர். இதனிடையே ருஸ்லான் பட்டினியாக இருப்பதை உணர்ந்து அவருக்கு உடனடியாக உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டது.
பின்னர் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்த பின்னர் மாநகராட்சி தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் ருஸ்லான்.
செல்வந்தராக இருந்தாலும் சூழ்நிலையால் ருஸ்லான் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்.