கடந்த பிப்ரவரி மாதத்தில் திரெளபதி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் முக்கிய ரோலில் ரிஸ்வான் என்பவர் நடித்திருந்தார்.
இதையடுத்து உலகமெங்கும் ஊரடங்கு உத்தரவால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. ஆனாலும் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
எனவே, சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க தெற்கு இணை ஆணையர் மகேஷ்வரி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு எம்.ஜி.ஆர் நகர் போலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா மெயின் ரோட்டில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்ட திரெளபதி பட துணை நடிகர் ரிஸ்வான்(30) என்பவரை போலிசார் கைது செய்தனர்.
மேலும், அவரது வீட்டில் இருந்து 57 குவார்ட்டர் பாட்டில்கள், 12 பீர் பாட்டில்கள், ரூ.2300 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அவர் அளித்த தகவலின்படி சினிமா புரொடக்ஷன் வேலை பார்க்கும் பிரதீப் மற்றும் அவரது வாகன ஓட்டுனரான சூளைமேடு பகுதியை சேர்ந்த தேவராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், தேவராஜ் காரில் பதுக்கி வைத்து இருந்த 189 குவார்ட்டர் பாட்டில்கள், 20,000 பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
திரௌபதி உள்ளிட்ட சினிமா படங்களில் நடித்த துணை நடிகரான ரிஸ்வான், தேவராஜிடம் இருந்து குவார்ட்டர் பாட்டில் ஒன்று ரூ.1000 கொடுத்து வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்துள்ளார்.
அதை, சினிமா துறையில் உள்ள தனது நண்பர்களுக்கு ரூ.1200க்கு விலை பேசி அதை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று சப்ளை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.