அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடை விதித்திருந்தது.
கரோனா வைரஸின் காரணமாக மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஈரான் நாடும் உள்ளது. கரோனாவை கட்டுக்குள் வைக்கும் நிலையில் ஈரான் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரத்தடை தங்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா ஈரான் நாட்டு நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு தேவையான உதவிகள் வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாடு மிகவும் வித்தியாசமான நாடாகும். அந்த நாடு மத்திய கிழக்கு பிராந்தியத்தை கைப்பற்ற முயற்சி செய்தது, இந்த சமயத்தில் தற்போது உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் அவர்கள் உள்ளனர்.
அவர்களும் கரோனாவால் கடுமையான அவதிப்பட்டு வருகின்றனர். இந்த விஷயம் எனக்கு தேவையில்லை என்றாலும், அவர்கள் விரும்பினால் நான் உதவி செய்கிறேன். அவர்களுக்கு தேவையான வென்டிலேட்டர் எங்களிடம் உள்ளது. எங்களிடம் வெண்டிலட்டர் குறித்து கேட்டால் நான் அனுப்ப தயாராக உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.