ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக அறிகுறிகளைக் காட்டி வரும் கொரோனா, தற்போது புதிய அச்சுறுத்தல் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், கொரோனாவின் முக்கிய அறிகுறியான மூச்சுத்திணறல் இல்லாமலே, மெல்லக்கொல்லும் hypoxia என்னும் பிரச்சினை கொரோனா நோயாளிகளிடம் காணப்படுவதை அமெரிக்க மருத்துவர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.
நியூயார்க்கிலுள்ள Bellevue மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவராகப் பணியாற்றும் Dr Richard Levitan, நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் பொருத்துவது எப்படி என்று பிற மருத்துவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகளாக கற்றுக்கொடுத்துவருகிறார்.
அப்போது, நிமோனியா தாக்கிய கொரோனா நோயாளிகளிடம் வித்தியாசமான ஒரு விடயத்தைக் கண்டதாக தெரிவிக்கிறார் அவர்.
நுரையீரல் முழுக்க பழுப்பு அல்லது திரவத்தால் நிறைந்திருக்கும் நிலையிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை, மூச்சுத்திணறல் இல்லாத கொரோனா நோயாளிகளைக் கண்டுள்ளார் அவர்.
அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படும் வரையில் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது என்று கூறும் Richard, சரியாக தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு கொண்டுவரப்படும்போதுதான், அவர்கள் ஏற்கனவே ஆபத்தான நிலைக்கு சென்றிருப்பது தெரியவருகிறது என்கிறார்.
இதற்குக் காரணம், அவர்கள் hypoxia என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதுதான் என்கிறார் அவர்.
Hypoxiaவால் திசுக்களில் ஆக்சிஜன் அளவு குறைந்து, சில நிமிடங்களில் இதயம், கல்லீரல், மூளை மற்றும் பிற உறுப்புக்கள் சேதமடைவதோடு, சிலர் இறந்தும் விடுகிறார்கள்.
நோயாளியின் எக்ஸ்-ரே, அவரது நுரையீரலில் பழுப்பும் திரவமும் இருப்பதைக்காட்டும் நிலையிலும், அவர்கள் மூச்சுத்திணறல் இன்றி இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார் Richard.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா உடைய நோயாளிகளுக்கு, ‘silent hypoxia’ என்னும் பிரச்சினை ஏற்படுவதாக தெரிவிக்கிறார் Richard.
அதாவது தொற்று முற்றும் வரை கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழல், இந்த நோயாளிகளில் காணப்படுகிறது.
இந்த கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியாவானது, நோயாளிகளின் நுரையீரலிலுள்ள காற்றுப்பைகளை செயலிழக்கச் செய்வதால் அவர்களது உடலில் ஆக்சிஜனின் அளவு குறைகிறது.
இருந்தும் இந்த நோயாளிகளால் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றமுடியும் என்பதால், அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதில்லை.
எனவேதான் அவர்களுக்கு பிரச்சினை இருப்பதை அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கமுடிவதில்லை.
ஆகவே, நோயாளிகள் pulse oximeter எனும் சிறு கருவியை வாங்கி வைத்துக்கொண்டு தங்கள் உடலில் ஆக்சிஜனின் அளவு குறைகிறதா என்பதை அவ்வப்போது கவனித்துக்கொள்ளுமாறும், ஆக்சிஜனின் அளவு மிகவும் குறையும் முன் மருத்துவர்களை அணுகுமாறும் ஆலோசனை கூறுகிறார் Richard.