தமிழகத்தில் சளி, இருமலுடன் சாலையில் கிடந்த முதியவரை அப்பகுதி மக்கள் பிணவறை அருகே வீசிச் சென்ற நிலையில், செஞ்சிலுவை சங்கத்தின் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியில் முதியவர் ஒருவர் நேற்று மயக்கமான நிலையில் கிடந்தார். காலில் புண் ஏற்பட்டு சுயநினைவின்றி கிடந்த அவரை அப்பகுதி மக்கள், மதுரை அரசு மருத்துவமனை பிணவறை பகுதியில் போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
2 நாட்களாக அவரது உடலில் ஈக்கள் மொய்த்தவாறு சளி, இருமலுடன் தவித்துக் கொண்டிருந்தார். அவர் பற்றிய வீடியோ காட்சி ஒன்று மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், மதுரை ரெட்கிராஸ் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்ட ஊழியர்கள் அவரை மீட்டு, விசாரித்தபோது, அவர் சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த டெய்லர் முகமது (60) எனத் தெரியவந்தது.
அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்க உதவினர். அவருக்கு காய்ச்சல், சளி, இரும்பல் இருப்பதால் கொரோனா நோய் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை கொரோனா வார்ட்டில் அனுமதித்துள்ளனர்.
கோரிப்பாளையம் பகுதியில் இருந்து மருத்துவமனை வளாத்தில் தூக்கி வீசப்பட்ட முதியவரை மீட்டு, மனித நேயத்துடன் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சைக்கு உதவிய ரெட் கிராஸ் நிர்வாகிகளை ஆட்சியர் பாராட்டினார்.
இது குறித்து மீட்புப் பணியில் உதவிய வழக்கறிஞர் முத்துக்குமார் கூறுகையில், சென்னையைச் சேர்ந்த இவருக்கு காலில் புண் ஏற்பட்டதால், வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார். கோரிப்பாளையம் பகுதியில் சில நாட்கள் சுற்றித் திரிந்துள்ளார்.
காய்ச்சல், இருமல் இருந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவருக்கு கொரோனா தொற்றாக இருக்கலாம் என, அவரை மருத்துவமனை வளாகத்தில் வீசிவிட்டு சென்றிருப்பதாக தெரிகிறது.
அவர் தொடர்ந்து 3 நாட்கள் கொரோனா வார்டில் வைத்து பரிசோதிக்கப்பட உள்ளது. தொற்று இருப்பது உறுதியானால் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.