கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு கொழும்பு சுகாதார அமைச்சு அவசர பணிப்புரையை விடுத்துள்ளது.
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இதற்குரிய மருத்துவமனைகளை அடையாளம் காண்பதற்கான பொறுப்பு அந்தந்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு கொழும்பு தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை, இரணவில மருத்துவமனை, பொலனறுவை கந்தக்காடு மருத்துவமனை, கொழும்பு முல்லேரியா மருத்துவமனை ஆகியவற்றில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தன.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் மருத்துவமனைகளை விரிவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவமனைகளைத் தயார்படுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மருத்துவமனைகளை அடையாளப்படுத்தும் பொறுப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.