யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு இடங்களில் பெறுமதியான இலத்திரனியல் பொருள்களைத் திருடிய மற்றும் திருட்டுப் பொருள்களை வாங்கிய எட்டுப்பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைதான சந்தேக நபர்களிடமிருந்து திருட்டுப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் பொம்மைவெளி, நாவாந்துறை மற்றும் கஸ்தூரியார் வீதி ஆகிய இடங்களைச் சேர்ந்த 8 பேரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக உள்ள காணியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
அந்தப் பணிகள் ஊரடங்கு நடைமுறையால் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அங்கு காணப்பட்ட கட்டட பொருள்கள், ரில்லர்கள் உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர இலத்திரனியல் வர்த்தக நிலையங்கள் இரண்டில் பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த சந்தேக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் பெறுமதியான திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று காவல்துறையினர் கூறினர்.