வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டதுடன், ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி மலேசியா சென்றிருந்த நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்துள்ளது.
இதன்போது குறித்த வீட்டினை உடைத்து அங்கு சென்ற கொள்ளையர்கள் தொலைக்காட்சி, சலவை இயந்திரம், மடிக்கணினி உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றனர்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு கடந்த வாரம் கிடைத்த முறைப்பாட்டையடுத்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், தேக்கவத்தை, கற்குழி, நெளுக்குளம், மகாறம்பைக்குளம், கோவில்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
இச்சம்பவம் தொடர்பில் 18 தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.