கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட செயலணியின் மீளாய்வு கூட்டம் அமைச்சர் பவித்ரா வனினியாராச்சி தலைமையில் இன்று (28) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இந்த விசேட செயலணியில் வைத்திய அதிகாரிகள், நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளடங்களாக 35 பேர் உள்ளடங்கும் அதேவேளை இந்த செலலணி இரண்டு நாளைக்கு ஒரு முறை சுகாதார அமைச்சர் தலைமையில் ஒன்று கூடி தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும்.
நோய் தொற்று குறைவான மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பராமரிப்பை வழங்குவது, வைத்தியர்கள் உட்பட அனைத்து வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்வது குறித்து இதன் போது கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலை ஊழியர்களை பராமறிக்க தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் ஏனைய உபகரணங்களை வழங்குவது தொடர்பிலும் இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
பி.சி.ஆர் பரிசோதனைக்கு மருத்துவ உபகரணங்களைப் பெறுவதற்கும், தினசரி பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், கொவிட் -19 தடுப்பு திட்டத்தில் பெரும் பங்கு வகிக்கும் சுகாதார அலுவலகங்களுக்கு கூடுதல் வாகனங்களை வழங்குவதற்கும் இங்கு முடிவெடுக்கப்பட்டது.
கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக சுகாதார அமைச்சின் கீழ் உள்ள சுகாதார அவசரகால செயல்பாட்டு மையத்தை அமல்படுத்துவது குறித்து பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரை அணுகவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.