இராணுவ பணியை மிகவும் நேசித்த பிரித்தானிய இளவரசர் ஹரி, தமது வாழ்க்கை தலை கீழாக மாறிவிட்டது என நெருங்கிய நண்பர்களிடம் வருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா அரச குடும்பத்தில் மூத்த உறுப்பினர் வரிசையில் இருந்து விலக் முடிவெடுத்தப் பின்னர், தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை எனவும் ஹரி ஒப்புகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவத்தில் பணியாற்றிய அந்த நாட்கள் தமது வாழ்க்கையில் மறக்க முடியாதது எனவும் இளவரசர் ஹரி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, பிரித்தானியாவில் இருந்து மனைவி மேகன் மெர்க்கலுடன் வெளியேற முடிவு செய்த பின்னரே, பிரித்தானிய ராணுவத்தில் தமக்கு அளிக்கப்பட்டிருந்த பொறுப்புகளை அவர் விட்டுவிட நேர்ந்தது.
தற்போது 35 வயதாகும் இளவரசர் ஹரி, பிரித்தானிய ராணுவத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். நெருங்கிய வட்டாரத்தில் இளவரசர் ஹரியை Captain Wales என்றே அழைத்து வந்துள்ளனர்.
இராணுவத்தில் பணி புரிந்த நாட்களை மறக்க முடியாது என கூறியுள்ள ஹரி, தமக்கு அளிக்கப்பட்டிருந்த ராணுவ பொறுப்புகள் மற்றும், சக ராணுவத்தினருடன் பேணி வந்த அந்த நட்புறவு அனைத்தும் தாம் இழந்து நிற்பதாக நண்பர்களிடம் வருந்தியுள்ளார்.
இது அனைத்தும் நடந்தேறும் என்று வாழ்க்கையில் ஒரு நாளும் எண்ணியதில்லை எனக் கூறும் ஹரி,
தமது வாழ்க்கை இப்படி தலை கீழாக மாறியதை தம்மால் நம்ப முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமது தற்போதைய நிலைக்கு காரணம் மேகன் என ஹரி கண்டிப்பாக கருதமாட்டார் என குறிப்பிட்டுள்ள நண்பர்கள்,
ராணுவத்தில் இருந்திருந்தால், இன்னும் அதிகமான பாதுகாப்பை அவர் உணர்ந்திருக்கலாம் என நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
அரச குடும்பத்தில் இருந்து மூத்த உறுப்பினர்கள் வரிசையில் இருந்து விலகிய பின்னர், ராணுவ பதவிகளையோ, அரச குடும்பம் அளித்த பட்டங்களையோ பயன்படுத்த முடியாது.
ஆனால் ராணுவத்தில் இதுவரை ஹரி பெற்றுக் கொண்ட பதக்கங்களை அவர் அணிந்து கொள்ளலாம்.
2017 ஆம் ஆண்டு பிரித்தானிய கடற்படையின் Captain General என்ற பொறுப்பை இளவரசர் ஹரிக்கு வழங்கப்பட்டது.
இளவரசர் ஹரி போர் சூழல் மிகுந்த ஆப்கானிஸ்தானுக்கு இரண்டு முறை அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.