தமிழகத்தில் சொந்த ஊருக்கு வர, மனைவி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியின் தலையில் கருங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு அதே கருங்கல்லை தனது தலையிலும், உடலிலும் தாக்கி கொண்டு தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் இரணிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (40), இவருடைய மனைவி விமலா (31).
சங்கர், தனது குடும்பப் பிரச்சினையால் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு இரணிமேடுவில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த குடியானகுப்பம் கிராமத்துக்கு வந்து, அங்குள்ள ராமகவுண்டர் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி குடும்பத்துடன் வசித்து வந்தார்.
லாக்டவுனால் வேலை வாய்ப்பின்றி வீட்டில் இருந்த சங்கர் நேற்று முன்தினம் இரவு மனைவி விமலாவை சொந்த ஊரான இரணிமேடு கிராமத்துக்குப் போகலாம் வா, எனக்கூறி அழைத்துள்ளார். ஆனால் விமலா அந்த ஊருக்கு வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த சங்கர், தன்னுடைய வீட்டருகே கிடந்த ஒரு கருங்கல்லை தூக்கி வந்து, வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த விமலாவின் தலையில் திடீரெனப் போட்டு நசுக்கி கொலை செய்தார். தலை சிதைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு எழுந்தது, ரத்த வெள்ளத்தில் விமலா படுத்தப்படுக்கையிலேயே கால்களும், கைகளும் துடி துடித்தபடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மனைவி தன்னுடைய கண் எதிரே உயிரிழந்ததைப் பார்த்த சங்கர் வாழ்க்கையில் மேலும் வெறுப்படைந்து, மனைவியை கொலை செய்த அதே கருங்கல்லை எடுத்து வெறி பிடித்தவாறு தன்னுடைய உடலிலும், தலையிலும் தாக்கி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதில் அவருக்கு தலையில் அடிபட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து விமலாவை பார்த்துக் கதறினர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விமலாவின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு இது குறித்து விசாரித்து வருகின்றனர்.